என்னைவிட எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் - அஸ்வின்!

Updated: Tue, Jun 20 2023 18:13 IST
“Quality bowler irrespective of conditions,” former India skipper on R Ashwin’s omission from WTC fi (Image Source: Google)

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11இல் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதில், அஸ்வின் இடம் பெறாதது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இது குறித்து அஸ்வின் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்தில் தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடந்து வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான் முதல் இன்னிங்ஸ்லும் 4 விக்கெட்டுகள், 2ஆவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுக்ள் கைப்பற்றினார். இதை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் ஏன் அஸ்வினை அணியில் சேர்க்காமல் விட்டார்கள் என்று விமர்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இது குறித்து பேசிய அஸ்வின், “நான் அதிகம் யோசிப்பேன் என்று என்னை பல பேர் குறிவைத்து செயல்படுகிறார்கள். ஒரு வீரர் தொடர்ந்து 15, 20 போட்டிகளில் விளையாடப் போகிறார் என்று தெரிந்தால் அவர் அதிகம் யோசிக்க மாட்டார் ஆனால் உங்களுக்கு கிடைக்கப் போவது ஒன்று இரண்டு ஆட்டம் தான் என்பது தெரிந்தால், நீங்கள் அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அதிகம் யோசிக்க தொடங்கி விடுவீர்கள். 

இதுதான் என்னுடைய வேலை. என்னுடைய பணியும் அதுதான்.நான் இப்படி யோசிப்பது தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இதுவே யாராவது என்னிடம் நீ தொடர்ந்து பதினைந்து போட்டிகளில் விளையாடப் போகிறாய். அதன்பிறகு உன்னை அணியே பார்த்துக் கொள்ளும். உனக்கு இந்த பொறுப்பு எல்லாம் வழங்கப்படும். அடுத்த தலைமை பொறுப்புக்கு நீ வரப் போகிறாய் என்று கூறினால் நானே ஏன் தேவையில்லாததை பற்றி யோசிக்க போகிறேன்.

இதனால் ஒருவரை இவர் அதிகம் சிந்திப்பார் என்று சொல்வது சரியானது கிடையாது. ஏனென்றால் அந்த நபர் எத்தகைய பயணத்தில் இருக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். என்னைப் பற்றி அப்படி சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் அதிகம் யோசிப்பேன் என்ற கருத்தை எனக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான் என நான் நினைக்கிறேன்.

என்னுடைய பெயர் கேப்டன் பதவிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் சிலர் இந்திய அணி வெளிநாட்டிற்கு சென்று விளையாடப் போகிறது என்றால் அதில் அஸ்வின் பெயர் இருக்காது பிறகு அவர் எப்படி கேப்டனாக மாற்றுவீர்கள் என்று பேசி வருகிறார்கள். என்னுடைய பெயர் அணியில் இருக்கிறதா? இல்லையா? என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. ஆனால் அந்த இடத்தை என்னால் கடும் முயற்சி மூலம் சம்பாதிக்க முடியும்.

எனினும் இந்த விஷயத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள். நான் ஒரு போட்டியில் சுலபமாக எந்த நெருக்கடியையும் இன்றி விளையாடி வந்து விடுவேன். ஆனால் எனக்காக என் தந்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக போட்டியை பார்ப்பார். இதனால் அவருக்கு தான் அதிக பாதிப்பும் நெருக்கடியும் ஏற்படுகிறது. தற்போது அவருக்கு இதய பிரச்சினை உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை