டிஎன்பிஎல் 2025: பெண் நடுவர் கொடுத்த தீர்ப்பு; கடுப்பில் கத்திய அஸ்வின் - வைரலாகும் காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு காரணமாக க்ள நடுவரிடம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டி நேற்று கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 93 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும் அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை வீசிய சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். ஆனால், அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாகத் தெரிந்ததால், அஸ்வின் நடுவரின் முடிவில் அதிருப்தியாகி, கள நடுவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இருப்பினும் டிராகன்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு மேல்முறையீட்டு வாய்ப்பையும் இழந்திருந்தது.
Also Read: LIVE Cricket Score
இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியவில்லை. இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்ற அஸ்வின், பெவிலியன் திரும்பும் போது பேட்டால் தனது பேடில் பலமாக தாக்கியதுடன், பெவிலியனுக்கு சென்று தனது கிளவுஸையும் கழற்றி வீசினார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.