பிளே ஆஃப் சுற்றில் அதிக விக்கெட்டுகள்; புதிய மைல் கல்லை எட்டினார் அஸ்வின்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் படித்த 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ரியான் பராக் 36 ரன்களும், ஹெட்மயர் 26 ரன்களும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவ்ரை களத்தில் இருந்த ரோவ்மன் பாவெல் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்ததன் மூலம் 19ஆவது ஓவர் முடிவில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கும் தகுதிப்பெற்றது.
இப்போட்டியில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக மோஹித் சர்மா பிளே ஆஃப் சுற்றுகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் அவரை அஸ்வின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி பின்னுக்கு தள்ளியுள்ளார். மேலும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ 28 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் தொடர்ந்து வருகிறார்.