பாபர், ரிஸ்வான் ஆகியோரின் மூலம் பாகிஸ்தான் அசுர வளர்ச்சியடைந்துள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Wed, Aug 30 2023 15:16 IST
Image Source: Google

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கிவுள்ளது. பாகிஸ்தானில் நடக்க வேண்டிய தொடரை, ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்களும் விரக்தியில் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் நடக்க வேண்டிய தொடரை, இந்தியாவால் இலங்கை ஆட வேண்டிய சூழலுக்கு பாகிஸ்தான் அணியும் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஆசியக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள், அங்கேயே இருந்து லங்கா பிரீமியர் லீக் தொடரிலும் விளையாடினர். அதுமட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்றனர். இதனால் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியாவை சாய்க்க பாகிஸ்தான் அணி வரிந்து கட்டி நிற்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் அண்மைக் கால செயல்பாடுகள் பற்றி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசி இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “6 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தான் அணியினர் ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களில் சொதப்புவார்கள். டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்டவை வென்றிருந்தாலும், சீரான ஆட்டங்களை வெளிப்படுத்தியதில்லை. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் வளர்ச்சி, பாகிஸ்தான் அணியை அபாயகரமாக மாற்றியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் எப்போதும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி வேறு மாதிரி மாறி இருக்கிறது. அதற்கு அந்த அணி வீரர்கள் அனைத்து லீக் தொடர்களிலும் விளையாடுவது தான் காரணம். பிஎஸ்எல் மட்டுமல்லாமல், பிக் பாஷ் போட்டிகளில் 60 முதல் 70 சதவிகித வீரர்கள் விளையாடுகிறார்கள். கிளாஸான வீரர்கள் மட்டுமல்லாமல், திறமையான ஏராளமான வீரர்களை பாகிஸ்தான் அணி கொண்டு வந்துள்ளது.

பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் சீரான ஆட்டத்தை மட்டும் வெளிப்படுத்தினால், எந்த அணியாக இருந்தாலும் அவர்களால் வீழ்த்த முடியும். நிச்சயம் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர்களில் பாகிஸ்தான் நிச்சயம் அபாயகரமான அணியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கையில் ஆசியக் கோப்பை தொடர் நடப்பதால், லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் கூட பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை