ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் - அஸ்வின்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதை போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி தங்கள் ஆதிக்கத்தை தொடரும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், “இந்தியா தொடர்ச்சியாக இரண்டு ஐசிசி பட்டங்களை வெல்லும் என்று நினைக்கிறேன். கிளென் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை புரிந்து கொள்ளவது கடினம், இறுதியில் குல்தீப் யாதவ் பந்தில் மேக்ஸ்வெல் வெளியேறுவார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.
அதனால் டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன். அதிலும் குறிப்பாக ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம், உடனடியாக வருணிடம் பந்தை கொடுங்கள். முதல் 10 ஓவர்களில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஹெட்டிற்கு சவால் விடுவேன். இதுவே எனது உத்தியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை வீழ்த்தி இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் அத்தொல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழித்தீர்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.