வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்பித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 565 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியானது 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.
இதன் காரணமாக வங்கதேச அணிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 6.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியானது இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பரிசுத்தொகையை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த பரிசுத் தொகையை, வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினேன். எனவே, நான் அவர்களுக்கு இந்த பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
தொடர்ந்து தனது ஆட்டம் குறித்து பேசிய முஷ்ஃபிக்கூர் ரஹீம், “வெளிநடுகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால், இது இதுவரை என்னுடைய மிகச்சிறந்த ஆட்டமாக நான் பார்க்கிறேன். மேலும் இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் இங்கு வந்ததில் இருந்து தீவிரமாக தயாராகினோம். அதேசமயம் இந்த டெஸ்ட் தொடருக்கு முன், இரண்டரை மாத இடைவெளி இருந்தது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வீரர்களுடன் அணியின் மற்ற வீரர்களும் நிர்வாகமும் அங்கு இருந்தனர். என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்க்கு பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன்” என்ரு தெரிவித்துள்ளார்.