விதியை மீறிய ஆஃப்கானிஸ்தான் வீரருக்கு ஐசிசி எச்சரிக்கை!

Updated: Wed, Oct 18 2023 12:46 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக தொடக்க குர்பாஸ் 80 ரன்களும், இக்ரம் கில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அதில் ரஷித் 3 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்துக்கு ஹரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்தும் ஏனைய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி வென்ற ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

முன்னதாக அப்போட்டியில் அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 80 ரன்களில் சிறப்பாக விளையாடிய போது எதிர்ப்புறம் இருந்த கேப்டன் ஷாஹிதியின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி சென்றார். அதனால் உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைக்கும் வாய்ப்பையும் அவர் தவற விட்டார். அதை விட அந்த ஏமாற்றத்தில் தரையில் தம்முடைய பேட்டால் அடித்த அவர் பெவிலியனுக்கு திரும்புவதற்கு முன்பாக பவுண்டரி எல்லைக்கு வெளியே இருந்த நாற்காலியையும் பேட்டால் அடித்து சேதப்படுத்தினார்.

இந்நிலையில் விதிமுறைப்படி குர்பாஸ் மைதான பொருட்களை சேதப்படுத்தியதற்காக அப்போட்டியின் நடுவர்கள் ஐசிசியுடம் புகார் தெரிவித்தனர். அதை ஏற்றுக் கொண்ட ஐசிசி குருபாஸ்க்கு அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையும் 1 கேரியர் கருப்பு புள்ளியையும் தண்டனையாக அறிவித்துள்ளது. மேலும் லெவல் 1 விதிமுறையை மீறியுள்ளதால் 50 சதவீதம் போட்டி சம்பளத்திலிருந்து அபராதமும் ஒரு கருப்பு புள்ளியும் தண்டனையாக கொடுக்கப்படும் என்று ஐசிசி கூறியுள்ளது.

ஆனால் கடந்த 24 மாதங்களில் குர்பாஸ் முதல் முறையாக இப்போது தான் விதிமுறையை மீறியுள்ளதால் அபராதம் தவிர்க்கப்பட்டு எச்சரிக்கை மற்றும் ஒரு கருப்பு புள்ளி தண்டனையாக கொடுக்கப்படுவதாக ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட குர்பாஸ் தண்டனையை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படாது என்றும் ஐசிசி கூறியுள்ளது. இருப்பினும் அடுத்த 24 மாதங்களில் இந்த கருப்பு புள்ளிகளின் எண்ணிக்கை நான்கை தொடும் பட்சத்தில் ஐசிசி விதிமுறைப்படி குர்பாஸ்க்கு ஒரு சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான தடை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை