தெருவோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவிய ரஹ்மனுல்லா குர்பாஸ்; வைரலாகும் காணொளி!
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றோடு விடை பெற்றுள்ளது . இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது ஆஃப்கானிஸ்தான் அணி. பெரும்பாலான விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது கணிப்பையும் தவிடு பொடி ஆக்கும் வகையில் தான் ஆப்கன் வீரர்களின் ஆட்டம் இருந்தது.
முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியது. தொடர்ந்து நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டியது. மும்பையில் ஆஸ்திரேலிய அணியின் முதல் 7 விக்கெட்களை 91 ரன்களுக்குள் கைப்பற்றி இருந்தது. ஆனால், மேக்ஸ்வெல் அந்த வெற்றியை ஆஃப்கனிடம் இருந்து பறித்தார்.
இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றது. வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அகமதாபாத்தின் பிளாட்ஃபார்ம்களில் உறங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பண உதவி செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி போராடி வீழ்ந்தது. அத்தோடு அந்த அணியின் உலகக்கோப்பை பயணமும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில்தான் தங்களின் சொந்த ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாளின் அதிகாலை 3 மணிக்கு குர்பாஸ் மட்டும் தனியாக இந்த உதவியைச் செய்திருக்கிறார்.
அகமதாபாத்தின் வீதிகளில் சுற்றிய குர்பாஸ் நடைபாதைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளியோரின் அருகே கொஞ்சம் பணத்தை வைத்துவிட்டு சத்தமே இல்லாமல் அப்படியே மெதுவாக நகர்ந்து செல்கிறார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பல தரப்பினரும் குர்பாஸை உச்சி முகர்ந்து பாராட்டி வருகின்றனர்.
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இந்த காணொளியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரத்தில் தெருவோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே ரூ.500 பணத் தாள்களை அவர்கள் அருகில் போட்டுவிட்டுச் செல்கிறார்.
இந்த காணொளியை பகிர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதில், "இந்த மாத தொடக்கத்தில் ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரட்டுவதற்காக அயராமல் உழைத்துவரும் வேளையிலும் வெளிநாட்டில் ரஹ்மானுல்லா காட்டிய இந்த கருணை எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஜானி" என்றும் பதிவிட்டுள்ளது. இந்த காணொளி தற்போது வைரலாக பரவிவருகிறது.