IND vs AFG, 1st T20I: போட்டியிலிருந்து விலகிய விராட் கோலி!

Updated: Wed, Jan 10 2024 18:26 IST
IND vs AFG, 1st T20I: போட்டியிலிருந்து விலகிய விராட் கோலி! (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராக உதவும் இத்தொடரில் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 14 மாதங்கள் கழித்து இந்த டி20 தொடரில் தேர்வாகியுள்ளார்.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடியிருந்த அவர்கள் மேற்கொண்டு டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வந்தனர். அதனால் அவர்களின் டி20 கேரியர் முடிந்ததாகவும் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்றும் செய்திகள் வெளியானது ரசிகர்களை சோகமடைய வைத்தது. அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிய இளம் அணி விளையாடும் என்றும் செய்திகள் வலம் வந்தன.

இருப்பினும் ஹர்திக் பாண்டியா காயத்தை சந்தித்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது மீண்டும் திரும்பியுள்ள ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து 14 மாதங்கள் கழித்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மொஹாலி நகரில் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். குறிப்பாக சொந்த காரணங்களுக்காக முதல் போட்டியில் விலகியுள்ள விராட் கோலி 2ஆவது போட்டியில் விளையாடுவார் என்றும் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை ஓப்பனிங் செய்கிறோம். இது போன்ற அணி உங்களிடம் இருக்கும் போது அணியின் நன்மைக்காக என்ன வேண்டுமோ அதை செய்யக்கூடிய வளைவுத் தன்மை உங்களுக்கு கிடைக்கிறது. எனவே யாருக்கும் வாய்ப்புகள் எதுவும் மூடவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவரை விளையாட விரும்புகிறோம். 

குறிப்பாக அவர் எங்களுக்கு டாப் ஆடரில் இடது கை கலவையையும் ஏற்படுத்துபவராக இருக்கிறார். மேலும் சொந்த காரணங்கள் காரணமாக நாளைய போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார்” என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் விராட் கோலி விலகியுள்ளதால் அவருடைய இடத்தில் திலக் வர்மா போன்ற இளம் வீரர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை