ஐபிஎல் 2025: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சிறப்பு சாதனை ஒன்றையும் ராகுல் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் காயம் காரணமாக களமிறங்காததை அடுத்து, கேஎல் ராகுல் தொடக்க வீரராக விளையாடினார். இந்நிலையில் இப்போட்டியில் கேஎல் ராகுல் அரைசதம் கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடக்க வீரராக அதிக 50+ ஸ்கோர்களை அடித்தவர்களின் அடிப்படையில் விராட் கோலியுடன் இணைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக விராட் கோலி 40 முறை அரைசதம் கடந்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் கேஎல் ராகுலும் 40ஆவது முறையாக அரைசதம் கடந்து அவரின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் 60 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் 49 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 77 ரன்களைச் சேர்த்தார். மேற்கொண்டு அபிஷேக் போரேல் 33 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் மீண்டும் சோபிக்க தவறினர். இதில் விஜய் சங்க 69 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்ப, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தும் அசத்தியது.