நாங்கள் சரியான திட்டத்துடன் செயல்படவுள்ளோம் - ராகுல் டிராவிட்
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக கே.எல்.ராகுல் தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட பலருக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும், எப்படி தென் ஆப்பிரிக்காவை சமாளிக்கும் என்ற குழப்பம் இருந்து வந்தது.
இந்நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்கள் சிறப்பான தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். அணியின் டாப் 3 வீரர்கள் பற்றி நன்கு அறிவோம். அதிக ஸ்கோர் போட்டிகளில் டாப் 3 வீரர்கள் ஸ்ட்ரைக் ரேட்டை சரியாக வைத்திருந்து, கடைசி வரை ஆட வேண்டும். மற்ற போட்டிகளிலும் ஓரளவிற்கு அணிக்கு உதவக்கூடிய வீரர்களையும் டாப் 3 இடங்களில் வைத்துள்ளோம்.
மேலும் தினேஷ் கார்த்திக் நினைத்தால் ஆட்டத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றும் திறன் உடையவர். அதன் காரணமாகவே அவரை இத்தொடருக்கு தேர்வு செய்துள்ளனர். அவர் இருப்பது எங்கள் அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.
உம்ரான் மாலிக் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். ஆனால் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் ஆட்டம் நடைபெறும் நேரத்தில் அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த அழுத்தத்தை ஏற்று, களத்தில் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உம்ரான் மாலிக் பிளேயிங் 11இல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ப்ளேயிங் 11 குறித்து அவர் எந்தவித தகவலையும் ராகுல் டிராவிட் இப்பேட்டியில் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.