ஆசியா கோப்பை 2022: ராகுல் டிராவிட்டிற்கு கரோனா உறுதி - தகவல்!
ஆசிய கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த 2 கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்தாலோசித்து, திட்டமிட்டு இந்திய அணியின் பென்ச் வலிமையை பலப்படுத்தியுள்ளனர். ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு கிரிக்கெட் தொடர்களில் ஆடுமளவிற்கு பென்ச் வலிமையை அதிகப்படுத்தியுள்ளனர்.
இந்திய அணியின் ஆடும் லெவனில் இருக்கும் முன்னணி வீரர்கள் ஒவ்வொருவர் இடத்திற்கும் 2 மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் களமிறங்க தயாராக 30 வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். அனைவருமே திறமையான வீரர்கள் என்பதால் அவர்களுக்கு இடையே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வரவுள்ள ஆசிய கோப்பை தொடரிலிருந்தும் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு மாற்றாக ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட விவிஎஸ் லக்ஷ்மண், ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளராக செயல்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.