SA vs IND: ராகுல் டிராவிட்டிற்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசிய சபா கரீம்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றியும், 2வது டெஸ்ட்டில் தோல்வியையும் அடைந்தது.
அதிலும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சரியில்லை. 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. தொடரின் முடிவை கேப்டவுனில் நடக்கும் கடைசி டெஸ்ட் தான் தீர்மானிக்கும்.
தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், ஒரு போட்டியில் அபாரமாக ஆடுவதும், அடுத்த போட்டியில் மோசமாக சொதப்புவதும் என இந்திய அணி செயல்படுகிறது. இதை சரிசெய்வதுதான் ராகுல் டிராவிட்டுக்கு பெரும் சவால் என்று சபா கரீம் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சபா கரீம், “ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் பெரும் சவாலே இந்திய அணியின் சீரற்ற ஆட்டத்தை சரி செய்வதுதான். ஒரு போட்டியில் அபாரமாக முழு எனர்ஜியுடன் ஆடிவிட்டு, அடுத்த போட்டியில் வெற்றி வேட்கை இல்லாமல் ஆடுவதுதான். டெஸ்ட் போட்டியில் 15 செசன்களிலும் முழு எனர்ஜியுடன் ஆடவேண்டும். அடுத்த டெஸ்ட்டிலும் அதே எனர்ஜி மற்றும் வெற்றி வேட்கையுடன் ஆடவேண்டும். அதை ராகுல் டிராவிட் உறுதி செய்யவேண்டும்.
ராகுல் டிராவிட், அணி கேப்டன் மற்றும் செலக்ஷன் கமிட்டி ஆகிய அணி நிர்வாகத்தினர் அனைவரும், இந்த இந்திய அணி காம்பினேஷனுடனேயே ஆடவேண்டுமா அல்லது இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா என்பதை பற்றி யோசிக்க வேண்டும். உள்நாட்டு போட்டிகளில் நல்ல அனுபவம் கொண்ட வீரர்கள் இந்திய அணிக்கு வலுசேர்ப்பார்களா என்று பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.