ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிதது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 84 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 50 ரன்களையும், சாய் சுதர்ஷன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து மிரட்டிய கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 ரன்களையும், ரியன் பராக் 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த அற்புதமான வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உலக சாதனையையும் படைத்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200க்கும் மேற்பட்ட ஸ்கோரை வேகமாக துரத்திய அணியாக ராஜஸ்தான் மாறியுள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு, மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி 16 ஓவர்களில் 200க்கும் மேற்பட்ட ரன்களை துரத்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
டி20 வரலாற்றில் அதிவேகமாக 200+ ரன்களைச் சேர்த்த அணிகள்
- 15.5 ஓவர்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், 2025*
- 16.0 ஓவர்கள் - சர்ரே vs மிடில்செக்ஸ், 2018.
- 16.0 ஓவ்ர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், 2024
- 16.0 ஓவர்கள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து, 2025
- 16.3 ஓவர்கள் - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023
Also Read: LIVE Cricket Score
இது தவிர, இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4 முறை 210+ ரன்களைச் சேஸிங் செய்த முதல் அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலா மூன்று முறை இதனைச் செய்துள்ளது. அதேசமயம் உலகளில் மிடில்செக்ஸ் அணி மட்டுமே 4 முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.