சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டனாக ரஜத் படிதார் சாதனை!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 32 ரன்களையும், விராட் கோலி 31 ரன்களையும் சேர்க்க, அணியின் கேப்டன் ரஜத் படிதர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் காரணமாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது.
சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மகேந்திர சிங் தோனி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய ரஜத் படிதர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் ரஜத் படிதர் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சிறப்பு சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் செப்பாக் கிரிக்கெட் மைதானத்தில் அரைசதம் கடந்து அசத்திய இரண்டாவது கேப்டன் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். உன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி சேப்பக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு ரஜத் படிதரின் தலைமையில் ஆர்சிபி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியுள்ளனர். இதற்கு முன்பு, ஆர்சிபி கடைசியாக சிஎஸ்கேவை அதன் சொந்த மைதானத்தில் 2008 ஆம் ஆண்டு தோற்கடித்தது, இது 6155 நாட்களுக்கு முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.