ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமனம்!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த ஆண்டு நவம்பர் 24, 25ஆம் தேதி சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது. இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. மேலும் 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் விளையாடும் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் தயாரிப்புகளில் இறங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக பல்வேறு அணிகளின் கேப்டன்களும் மாற்றப்பட்டுள்ளனர். உதாரணமாக பஞ்சாப் கிங்ஸின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிதிருந்தது. இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜத் பட்டிதாரை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.
முன்னதாக இந்த வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.11 கோடிக்கு ரஜத் பட்டிதாரை தக்கவைத்தது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ரஜ்த் பட்டிதார் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 7 அரைசதங்கள் உள்பட 799 ரன்களைக் குவித்துள்ளார். அதிலும் கடந்தாண்டு ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாகவும் பட்டிதார் அமைந்தார்.
கடந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடிய 15 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 395 ரன்களைக் குவித்திருந்தார். இதில் 33 சிக்ஸர்களும் அடங்கும். இதற்கு முன் அவர் ஐபிஎல் 2022ஆம் ஆண்டு ஏலத்தின் போது எந்த அணியாலும் வாங்கப்படாத நிலையில், மாற்று வீரராக ஆர்சிபி அணி அவரைத்தேர்வு செய்திருந்தது. அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் பாடிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.