ரஞ்சி கோப்பை 2022/23: சதமடித்து அசத்திய இஷான் கிஷான்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Thu, Dec 15 2022 22:26 IST
Image Source: Google

வங்கதேசம் அணியுடன் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக பிளேயிங் லெவனில் எடுக்கப்பட்ட இஷான் கிஷன், அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டு தனது சர்வதேச போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

அத்துடன் இஷான் கிஷன் நிற்கவில்லை. சதத்தை இரட்டை சதமாகவும் மாற்றி பல வரலாற்று சாதனைகளை படைத்தார். இதன் காரணமாக ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பெருத்த முன்னேற்றம் கிடைத்திருக்கிறது. தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

வங்கதேசம் அணியுடனான ஒருநாள் தொடர் முடிவுற்ற பிறகு நாடு திரும்பிய இஷான் கிஷன், தற்போது ரஞ்சிக் கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மற்றும் கேரளா இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் விளையாடிய இஷான் கிஷன், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த அந்த பார்மை ரஞ்சிக்கோப்பை போட்டியிலும் தொடர்ந்தார். முதல் இன்னிங்சில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி தனது சதத்தை பதிவு செய்தார். 

இப்போட்டியில் 195 பந்துகளில் 132 ரன்கள் அடித்த இஷான் கிஷான் ஆட்டம் இழந்தார். இதில் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளும் அடங்கும். தொடர்ச்சியாக தனது பங்களிப்பை கொடுத்து வரும் இவருக்கு விரைவில் டெஸ்ட் அணியிலும் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் சமகாலத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் நிதானமாக விளையாடினால் சரி வராது அதிரடியாக விளையாட வேண்டும் என்று ஒவ்வொரு அணி நிர்வாகம் முடிவு செய்து வருகிறது. இதற்கு முன் உதாரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்திய அணி நிர்வாகமும் அத்தகைய முடிவில் இருப்பதால் இஷான் கிஷன்-க்கு அவரது அதிரடியின் காரணமாக விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவும் விரைவில் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வைக்கப்பட உள்ளார் என்ற தகவல்களும் வருகின்றது.

தற்போது வங்கதேச அணியுடன் நடைபெற்று வரும் தொடரில் சூர்யகுமார் யாதவிற்கு ஓய்வு கொடுத்திருப்பதால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் எடுக்கப்படவில்லை. அவரும் அணிக்குள் வந்துவிட்டால் இந்திய அணியும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான அணுகுமுறையை நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை