ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவிற்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!

Updated: Sat, Feb 10 2024 22:11 IST
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவிற்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு! (Image Source: Google)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி தேவ்தத் படிக்கல்லின் அபாரமான சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்தது. இதைத்தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தேவ்தத் படிக்கல் 151 ரன்களுடனும், ஹர்திக் ராஜ் 35 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் படிக்கல் மேற்கொண்டு ரன்கள் ஏதும் எடுக்காமல் 151 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த ஹர்திக் ராஜ் 51 ரன்களிலும், ஸ்ரீனிவாஸ் ஷர்த் 45 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, கர்நாடகா அணி 366 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், முகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் விமல் குமார் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பால் 5 ரன்களில் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் நாராயன் ஜெகதீசன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் பாபா இந்திரஜித் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர், விஜய் சங்கர், பூபதி குமார், கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. 

தமிழ்நாடு அணி தரப்பில் பாபா இந்திரஜித் 35 ரன்களுடனும், முகமது 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கர்நாடகா அணி தரப்பில் ஷசி குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் ராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 237 ரன்கள் பின் தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை