ரஞ்சி கோப்பை 2024: ரஹானே, முஷீர் கான் அரைசதம்; வலிமையான முன்னிலையில் மும்பை!

Updated: Mon, Mar 11 2024 21:19 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் விதர்பா அணிகள் முன்னேறின. அதன்படி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா 46 ரன்களையும், புபென் லால்வானி 37 ரன்களையும் சேர்த்து தொடக்கம் கொடுத்த நிலையில் அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 75 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணியானது மும்பை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக முக்கிய வீரர்கள் கருண் நாயர், துருவ் ஷோர்வ், யாஷ் ரத்தோட் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் விதர்பார் அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் தவால் குல்கர்னி, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்யான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா 11 ரன்களிலும், புபென் லால்வானி 18 ரன்களிலும் என தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த முஷீர் கான் - கேப்டன் அஜிங்கியா ரஹானே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் முஷீர் கான் 51 ரன்களுடனும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விதர்பா தரப்பில் யாஷ் தாக்கூர், ஹார்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 260 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை