ரஞ்சி கோப்பை 2024: அஜித் ராம் அபார பந்துவீச்சு; கடின இலக்கை நோக்கி விளையாடும் தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணி தேவ்தத் படிக்கல்லின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், முகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதிலும் நட்சத்திர வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலுயனுக்கு திரும்ப, இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித் 35 ரன்களுடனும், முகமது 3 ரன்களுடனும் களத்தில் தொடந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திரஜித் 48 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கர்நாடகா அணி தரப்பில் விஜய்குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் 215 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய கர்நாடாக அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் அதிகபட்சமாக படிக்கல் 36 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் ரன்களைச் சேர்க்க வில்லை. இதனால் அந்த அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக அஜித் ராம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் தமிழ்நாடு அணிக்கு 355 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணியில் தொடகக் வீரர் ஜெகதீசன் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் 4ஆம் நாள் ஆட்டத்தில் 319 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட இருக்கிறது.