ரஞ்சி கோப்பை 2024: சாய் கிஷோர், இந்திரஜித் அரைசதம்; முன்னிலையில் தமிழ்நாடு அணி!

Updated: Sat, Feb 24 2024 19:51 IST
ரஞ்சி கோப்பை 2024: சாய் கிஷோர், இந்திரஜித் அரைசதம்; முன்னிலையில் தமிழ்நாடு அணி! (Image Source: Google)

இந்தியாவின் புகழ்மிக்க கிரிக்கெட் தொடரில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய மூன்றாவது காலிறுச்சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய சௌரஷ்டிரா அணி 183 ரன்களுக்கு ஆல அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹர்விக் தேசய் 83 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் - விமால் குமார் தொடக்கம் கொடுத்தனர்.

இதில் விமல் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜெகதீசன் 12 ரன்களுடனும், சாய் கிஷோர் 6 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பாலும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சாய் கிஷோர் - பாபா இந்திரஜித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கல் என 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாய் கிஷோர் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜித் 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பூபதி குமாரும் அரைசதம் கந்த கையோடு 65 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த விஜய் சங்கர் - முகமது அலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதில் விஜய் சங்கர் 14 ரன்களுடனும், முகமது அலி 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சௌராஷ்டிரா அணி தரப்பில் பர்த் பட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து 117 ரன்கள் முன்னிலையுடன் தமிழ்நாடு அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை