ரஞ்சி கோப்பை 2022: தோல்வியைத் தவிர்க்க போராடும் மும்பை!
ரஞ்சிக் கோப்பை தொடரின் நடப்பானடு சீசனுக்கான இறுதிப் போட்டியில் மும்பை - மத்தியப் பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதிலும் சர்பராஸ் கானின் சதம் மற்றும் ஜெய்ஸ்வாலின் அரைசதத்தின் உதவியுடன் 374 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மத்தியப் பிரதேச ஓப்பனர்கள் யஷ் துபே மற்றும் ஹிமான்சு மந்திரி ஆகியோர் மும்பை பவுலர்களுக்கு கடும் சவால் அளித்தனர். ஹிமான்சு 31 ரன்களில் ஆட்டமிழக்க, யஷ் துபே சதம் விளாசி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய சுபம் ஷர்மா மற்றும் ரஜத் படிதார் ஆகிய இருவரும் மும்பை பவுலர்களை கடுமையாக சோதித்தனர்.
இருவரும் அரைசதம் கடந்த போது, படிதார் கொடுத்த கேட்சை சரியாக பிடித்தபோதிலும், அது நோ பாலாக அறிவிக்கப்பட மும்பை பவுலர்கள் சோர்வடைந்தனர். மளமளவென இருவரும் போட்டி போட்டு ரன் குவித்து இருவரும் சதம் கடந்தனர். இதன்பின் வந்தவர்கள் கடகடவென அவுட்டான போதிலும், சாரன்ஷ் ஜெயின் பொறுப்பாக விளையாடி அரைசதம் விளாச 500 ரன்களை அசால்ட்டாக கடந்தது மத்தியப் பிரதேச அணி.
இதையடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மத்தியப் பிரதேச அணி 536 ரன்களை குவித்தது. அணியில் அபாரமாக விளையாடிய யஷ் துபே, சுபம் ஷர்மா மற்றும் ரஜத் படிதார் ஆகிய மூவரின் சதத்தால் இந்த இமாலய ஸ்கோரை எட்டியது மத்திய பிரதேச அணி.
அதன்பின் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை துவங்கிய மும்பை அணி துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர்களான பிரித்வி ஷா மற்றும் ஹர்திக் தமோர் இருவரையும் அரைசதத்தை கூட நெருங்க விடாமல் வெளியேற்றினர் மத்திய பிரதேச பவுலர்கள்.
இதனால் 4ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மும்பை அணி குவித்துள்ளது. இன்னும் 49 ரன்கள் பின் தங்கி இருப்பதால் நாளைய ஆட்டத்தில் தோல்வியை தவிர்க்க மும்பை அணி போராடும். அதேபோல், மும்பை அணியை விரைவில் ஆட்டமிழக்கச் செய்து வெற்றிக்கனியை பறிக்க மத்திய பிரதேச அணியும் நாளை முனைப்புக்காட்டும். இதனால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.