ரஞ்சி கோப்பை 2024: முஷீர் கான் அபார சதம; விதர்பா அணிக்கு இமாலய இலக்கு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் விதர்பா அணிகள் முன்னேறின. அதன்படி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா 46 ரன்களையும், புபென் லால்வானி 37 ரன்களையும் சேர்த்து தொடக்கம் கொடுத்த நிலையில் அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 75 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணியானது மும்பை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக முக்கிய வீரர்கள் கருண் நாயர், துருவ் ஷோர்வ், யாஷ் ரத்தோட் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் விதர்பார் அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் தவால் குல்கர்னி, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்யான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மும்பை அணியின் முஷீர் கான் 51 ரன்களுடனும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 58 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே 73 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த, மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த முஷீர் கான் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த இளம் வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 95 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஹர்திக் தோமர் 5 ரன்களுக்கும், முஷீர் கான் 136 ரன்களிலும் என தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷம்ஸ் முலானி தனது பங்கிற்கு அரைசதம் கடந்து விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் ஹர்ஷ் தூபே 5 விக்கெட்டுகளையும், யஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் விதர்பா அணி வெற்றிக்கு 538 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள விதர்பா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்துள்ளது.