ஐபிஎல் 2021: ரஷித் கான், முகமது நபி விளையாடுவது உறுதி!
கரோனா தொற்று பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. மொத்தம் 29 போட்டிகள் கொண்ட இத்தொடரின் அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான் அவீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
ஆஃப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலையில், அவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் தற்போது அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரி உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய எஸ்ஆர்எச் சிஇஓ சண்முகம்,“அவர்கள் இருவரிடமும் நாங்கள் அங்குள்ள சூழல் குறித்து பேசினோம். அவர்கல் இருவரும் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடுவார்கள் என தெரிவித்தனர். மேலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இருவரும் ஐக்கிய அரபு அமீரகம் வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.