நான் பந்துவீச கடினமாக இருந்த இந்த பேட்ஸ்மேனுக்கு தான் - ரஷித் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட் மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் முதன்மை பந்துவீச்சாளராக திகழ்ந்துவரும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஷீத் கான். இவர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15ஆவது ஐபிஎல் தொடரிலும் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதோடு பேட்டிங்கிலும் அவர் ஒரு சில போட்டிகளில் குஜராத் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் ஒட்டுமொத்தமாக ஒரு ஓவருக்கு 6.60 ரன்கள் என்ற விகிதத்தில் மட்டுமே ரன்களை விட்டுக்கொடுத்து, தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் 17 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இப்படி மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் ரஷித் கான் எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீச கஷ்டப்படுவீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசிய அவர், “நான் குஜராத் அணியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை எனது அணியில் உள்ள சுப்மன் கில்லுக்கு எதிராக பந்து வீசுவது மிக கடினம்.
ஏனெனில் அவர் தனது பேட்டிங்கில் நிறைய பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவரைப் போன்ற ஒரு இளம் வீரர் அணியில் இருப்பது நிச்சயம் அணிக்கு கூடுதல் உத்வேகத்தை தரும். இந்த தொடர் முழுவதுமே அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். என்னைப் பொறுத்தவரை நிச்சயம் நான் பந்துவீச பயப்படும் இந்திய இளம் பேட்ஸ்மேன் என்றால் சுப்மன் கில் மட்டும்தான்.
நல்லவேளை அவர் எனது அணியிலேயே இருந்து விட்டார். பாண்டியாவின் தலைமையில் இம்முறை குஜராத் அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. நிச்சயம் அவர் ஒரு மதிப்புமிக்க இந்திய வீரர். அவருடைய தலைமை பண்பினை இந்தத் தொடரில் சிறப்பாக வெளி காண்பித்துள்ளார்.
அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு ஒருங்கிணைத்து போட்டிகளை எவ்வாறு வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என அனைத்திலும் அவர் மிக நேர்த்தியாக நடந்துகொண்டார்” என தெரிவித்துள்ளார்.