டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்; ரஷித் கான் இமாலய சாதனை
அபுதாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்த நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளையில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் இந்திய அணியும் சூப்பர் 12-சுற்றோடு இந்த தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு சாதனையை இளம் வயதிலேயே படைத்துள்ளார். 23 வயதாகும் ரஷித் கான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 56 போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 289 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிவேகமாக 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு முன்னதாக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக பிராவோ 553 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து சுனில் நரேன் 425 விக்கெட்டுகள், இம்ரான் தாஹிர் 420 விக்கெட்டுகளுடன் எடுத்து அடுத்தடுத்த இடத்தில் உள்ள நிலையில் தற்போது 400 ஆவது விக்கெட்டை எடுத்து ரஷீத் கான் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
தற்போது 23 வயதாகும் இவர் இன்னும் குறைந்தது 10 ஆண்டுகள் விளையாடுவார் என்பது நிச்சயம். இதனால் டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் விக்கெட்டுகளை கூட எடுக்க அவருக்கு பிரமாதான வாய்ப்பு இருக்கிறது. இதன் பின்னர் வரும் வீரர்கள் இவரது விக்கெட் எண்ணிக்கையை தொடுவது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும் என்பதனால் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வரலாற்றினை படைக்க ரஷீத் கான் முன்னேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.