இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஷித் கான்!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை நேற்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை அசால்டாக 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 80, இக்ரம் அலிகில் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 285 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் அதை சேசிங் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே ஆஃப்கானிஸ்தானின் சிறப்பான பந்து வீச்சில் சீரான இடைவேலைகளில் விக்கெட்களை இழந்து 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரகுமான், ரசித் கான் தலா 3 விக்கெட்களும் முகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்து சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தினார்.
இதன்மூலம் உலகக் கோப்பையில் 14 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆஃப்கானிஸ்தான் அசத்தியது. அதை விட உலக அரங்கில் வலுவான அணியாக திகழும் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே பதிவு செய்து வந்த ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து சரித்திரத்தை மாற்றி எழுதியது.
மேலும் இந்த வெற்றி நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக ஆட்டநாயகன் விருது வென்ற முஜீப் உர் ரஹ்மான் தெரிவித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதே போல வேதனைகளை மட்டுமே சந்தித்து வரும் ஆஃப்கானிஸ்தான் மக்களின் முகத்தில் இந்த வெற்றி சிறிய புன்னகையை ஏற்படுத்தும் என்று நம்புவதாக ரசித் கான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போட்டி நடைபெற்ற டெல்லி மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை வீழ்த்தும் அளவுக்கு தங்களுக்கு இந்திய ரசிகர்கள் ஆதரவையும் உத்வேகத்தையும் கொடுத்ததாக ரசித் கான் கூறியுள்ளார். குறிப்பாக உண்மையாகவே மனதளவிலும் அன்பை கொடுப்பவர்களாக இருக்கும் டெல்லி ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதுவில், “டெல்லி உண்மையாகவே மனதளவிலும் நல்ல மனதைக் கொண்டுள்ளார்கள். மைதானத்திற்கு வந்து எங்களை ஆதரித்து போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. மேலும் உலகம் முழுவதிலும் உள்ள எங்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் உங்களின் அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.