விராட் கோலி பதவிவிலகியது மூலம் இந்திய கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளது - ரஷித் லதிஃப்!
இந்திய அணியின் சிறப்பு மிக்க கேப்டன்களில் ஒருவராக வலம் வந்த விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதால் உருவான அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. நல்ல விசயங்களுக்கு முடிவு வருவது போல் தனது கேப்டன்ஷிப் பயணத்திற்கும் முடிவு வந்துவிட்டதாக கோலி கூலாக கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.
விராட் கோலியின் ராஜினாமா அவரது தனிப்பட்ட முடிவு என்றும், இதனை பிசிசிஐ மதிப்பதாக கங்குலி தெரிவித்தார். ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லையென பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய லதிஃப், “கங்குலியுடன் விராட் கோலி மோதியதால் தான், அவர் பதவி விலக நேரிட்டது என்று தெரிவித்துள்ளார். கங்குலி, விராட் கோலியை புகழ்ந்தாலும், விராட் கோலி வேறு காரணங்களை சொன்னாலும் அதில் எதுவும் உண்மை அல்ல.
இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்கள் மோதி கொண்டனர். கிரிக்கெட் வாரியத்துடன் மோதியதால் தான் விராட் கோலி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
விராட் கோலியை குறிவைத்து செயல்பட்டது மூலம் இந்திய கிரிக்கெட் பாதிக்கப்பட்டு விட்டது. டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டியிலிருந்து விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது விராட் கோலிக்கு மறைமுக அழுத்தம் ஏற்படுத்தியது. இதனால் வெல்ல வேண்டிய தென் ஆப்பிரிக்க தொடரை இந்தியா தோற்றுவிட்டது.
விராட் கோலி உணர்ச்சிவசப்பட கூடியவர். இதனால் அவரை எப்படி , எப்போது கோவப்படுத்த வேண்டும் என்று இங்கு சிலருக்கு நன்கு தெரிந்துள்ளது. அவர் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு எப்படி டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். ஆனால் ஒருநாள் போட்டியிலிருந்தும் நீக்கிவிட்டீர்கள், இப்போது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவரே சென்றுவிட்டார்
விராட் கோலியை நீங்கள் நிலைக்குலைய செய்தது மூலம் இந்திய கிரிக்கெட்டையே நிலையற்ற தன்மைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலிக்கு இது போன்ற மன அழுத்தங்கள் தொடர்ந்து தரப்பட்டால், அவர் கிரிக்கெட்டை விட்டு சென்று விடுவார்களோ என்று அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.