பிசிசிஐ vs கோலி: கோலி விவகாரத்தில் இனி கங்குலி தான் பதிலளிக்க வேண்டு - ரவி சாஸ்திரி!

Updated: Fri, Dec 24 2021 11:15 IST
Image Source: Google

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். 

வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, நான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கூறியபோது, அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. என்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக கடைசி நேரத்தில் தான் தெரிவித்தனரே தவிர, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றார்.

பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துக்கு கோலியின் கருத்து முற்றிலும் முரண்பாடாக இருந்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் உருவெடுத்தது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். விராட் கோலியிடம் முன்கூட்டியே கேப்டன்சி நீக்கம் குறித்து தெரியப்படுத்தியிருக்கலாம் என்பதே முன்னாள் வீரர்கள் பலரது கருத்து. கோலி கேப்டன்சி நீக்கம் விவகாரம் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “கோலி அவர் தரப்பிலிருந்து பேச வேண்டிய அனைத்தையும் பேசிவிட்டார். இனி பிசிசிஐ தலைவர் தான் பேச வேண்டும். கேப்டன்சி நீக்கம் குறித்து முன்கூட்டியே கோலியிடம் தெரியப்படுத்தி, இந்த விவகாரத்தை நல்லவிதமாக கையாண்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை