ரோஹித் சர்மாவில் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 4 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 101 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் 140 ரன்களும், யான்சன் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா அணி 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் 3ஆம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை விரைந்து ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் செஞ்சூரியன் மைதானத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் எதிரணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இந்த நிலையில் 2ஆம் நாளில் இந்திய அணி பின்னடைவை சந்தித்ததற்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்சியே காரணமாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பேசிய இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இரு பவுலர்களையும் எந்த செஷனாக இருந்தாலும் கடைசியாக தான் அட்டாக்கில் கொண்டு வர வேண்டும். நான் பயிற்சியளித்த நாட்களில் இதுகுறித்து ஏராளமான முறை பேசி இருக்கிறோம். எப்போது டாப் 2 பவுலர்களை தான் செஷனை தொடங்க வேண்டும். அதை செய்யாதது தான் ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறு” என்று தெரிவித்துள்ளார்.
டீன் எல்கர் - ஸோர்ஸி இருவரும் 2ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க பும்ரா - சிராஜ் இருவரும் கூட்டணியின் மூலமாக 2ஆவது செஷனை தொடங்காமல், ஷர்துல் தாக்கூர் - பிரசித் கிருஷ்ணாவை வைத்து ரோஹித் சர்மா தொடங்கினார். இவர்கள் இருவரும் அதிக பவுண்டரிகளை விட்டுக் கொடுத்ததால், தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.