அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Fri, Sep 27 2024 19:46 IST
Image Source: Google

இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த பெவிலியன் திரும்பினார். 

இதனால் வங்கதேச அணி 29 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசியதன் மூலம் அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. வங்கதேச அணி தரப்பில் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் அனில் கும்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக அனில் கும்ப்ளே 419 விக்கெட்டுகலை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 420 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 612 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை