அக்சர் குறித்து சந்தேகம் இருந்தால் அஸ்வினை உடனே களம் இறக்கலாம் - சுனில் கவாஸ்கர்!

Updated: Wed, Sep 27 2023 13:24 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது. நாளை மறுநாள் உலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் எல்லா அணிகளுக்கும் துவங்க இருக்கிறது. பங்கேற்கும் பத்து அணிகளும் தலா இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றன.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயமாக உலகக் கோப்பையின் பயிற்சி போட்டிகள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றன. மேலும் இந்த இரண்டு அணிகளுமே தங்களின் முதல் போட்டியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகியுள்ள விதத்தை எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்தமாக குறை சொல்வதற்கு என்று எதுவும் கிடையாது. எல்லா பெட்டிகளையும் டிக் அடித்து, மேலும் எல்லா வீரர்களும் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். இந்திய அணிக்கு ஒரு சிறிய பிரச்சனை இருக்கக்கூடிய இடமாக, சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேலா? இல்லை ரவிச்சந்திரன் அஸ்வினா? என்பதுதான் இருந்து வருகிறது. மேலும் சரத்துல் தாக்கூர் இடத்தில் ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளர் இடம் பெறுவாரா? என்பதும் இருக்கிறது.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி பயிற்சிக்கான காலத்தை கொடுப்பதற்கு இரண்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொடுக்கப்பட்டது. இதில் இரண்டு போட்டியுமே அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் பந்துவீச்சில் ஒரு புதிய வேரியேசனையும் கொண்டுவந்து கலக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் அக்சரா? அஸ்வினா? என்பது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர், “கடந்த இரண்டு போட்டிகளில் அஸ்வின் பந்து வீசிய விதம், அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார் என்று நினைக்கிறேன். அக்சர் படேலின் உடல் தகுதியில் சந்தேகம் இருந்தால், அவர் முழு உலகக்கோப்பைக்கும் உடல் தகுதியுடன் இருப்பாரா? என்று பார்க்க வேண்டும்.

ஏனென்றால் மீண்டும் காயம் நிகழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மேலும் அவர் கவனமாகவும் இருக்க வேண்டும். அணி நிர்வாகம் அவருடன் செல்வதற்கான ரிஸ்கை எடுக்கக் கூடாது. ஏனென்றால் இது உலகக் கோப்பை தொடர். ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அக்சர் குறித்து சந்தேகம் இருந்தால் அஸ்வினை உடனே களம் இறக்கலாம்.

அஸ்வின் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் கடைசி மூன்று நான்கு ஓவர்களை சிறப்பாக வீசினார். பிறகு இந்தூரில் அவர் கேரம் பந்தை பயன்படுத்திய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. எனவே அக்சர் மீது சந்தேகம் இருந்தாலே அஸ்வின் மீண்டும் இந்திய அணிக்குள் வருவார்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலிருந்து அஸ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை