ENG vs IND, 5th Test : இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வின்!

Updated: Tue, Jun 28 2022 14:52 IST
Ravinchandran Ashwin Will Play A Key Role In Edgbaston Test For India, Says Swann (Image Source: Google)

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.  ஏற்கனவே கடந்த ஆண்டில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து, அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 

கரோனா காரணமாக கடைசிப் போட்டி நடைபெறவில்லை. அப்போட்டிதான் தற்போது நடைபெறவுள்ளது. அதில் இந்தியா டிரா செய்துவிட்டால்கூட, தொடரை கைப்பற்றிவிடும். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து, காயம் காரணமாக துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியதை அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு கரோனா உறுதியானது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்தியாவிலேயே கரோனா உறுதியானதால், இங்கிலாந்து புறப்படாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் விராட் கோலிக்கு கரோனா உறுதியாகி, மறுநாளே நெகடிவ் என வந்துவிட்டது. அடுத்து, நேற்று முன்தினம் ரோஹித் ஷர்மாவுக்கு கரோனா உறுதியானதாக தகவல் வெளியானது. அவருக்கு இன்னும் குணமடையவில்லை.

இதனால், மாற்று ஓபனர் மயங்க் அகர்வால் அவசர அவசரமாக இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். இவர் பயிற்சி எதுவும் எடுக்காமல் இருப்பதால், இங்கிலாந்து டெஸ்டில் சொதப்ப அதிக வாய்ப்புள்ளது. 22 பேர்கொண்ட இந்திய அணிக் குழுவில் மாற்று ஓபனரை சேர்க்காமல் ரோஹித், ஷுப்மன் கில்லை நம்பி சென்றதால்தான், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கரோனாவில் இருந்து விடுபட்டு, இங்கிலாந்து புறப்பட்டு சென்றுவிட்டார். மேலும் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் கடைசி நாளில் சிறப்பாக பந்துவீசி, 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இவருடன் பந்துவீசிய ஜடேஜா அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். இதனால், அஸ்வின் லெவன் அணியில் இடம்பெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

அஸ்வின் பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி, விக்கெட்களை வீழ்த்தக் கூடியவர். இங்கிலாந்து அணி ஓபனர் இடது கை பேட்ஸ்மேன் அலேக்ஸ் லீஸ் கடந்த சில போட்டிகளில் தடுமாற்றமான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தி வருகிறார். இதனால், அவரது விக்கெட்டை அஸ்வின் விரைந்து எடுத்துக்கொடுக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும், இங்கிலாந்து கேப்டன் இடது கை பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸும் அஸ்வினால் அச்சுறுத்த முடியும். இந்த இரண்டு விக்கெட்களை விரைந்து வீழ்த்திவிட்டேல, சுலபமாக இங்கிலாந்துக்கு அழுத்தங்களை உண்டு பண்ண முடியும். இதனால், அஸ்வின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை