IND vs ENG: காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் ஜடேஜா?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 436 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது நிலையில், 190 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய 196 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி 420 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களுகே ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்த ஒல்லி போப் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்ப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய போட்டியில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த போது ஜடேஜாவிற்கு தசைபிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஜடேஜா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.