எல்லோரும் 100% கொடுக்கவே உழைக்கிறார்கள் - கபில் தேவ் கருத்து ஜடேஜா பதிலடி!

Updated: Tue, Aug 01 2023 11:12 IST
Image Source: Google

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளை இரண்டு அணிகளும் வென்றுள்ளதால் மூன்றாவது போட்டிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் அடைந்த தோல்வி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல முன்னாள் வீரர்கள் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று வீரர்களை பரிசோதிக்க முதலில் பேட்டிங் எடுக்காமல் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்து சொதப்பினார். இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் களமிறங்கி தோற்றார்கள்.

தற்பொழுது மூன்றாவது போட்டியில் என்ன செய்வார்கள் என்கின்ற குழப்பமே எஞ்சி இருக்கிறது இப்படியான நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ், ” சில சமயம் அதிக பணம் வரும்பொழுது கூடவே திமிரும் சேர்ந்து வரும். இந்த இந்திய அணியின் வீரர்கள் தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கிறார்கள். இதுதான் இதில் இருக்கும் வித்தியாசம். பல கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி தேவை என்று நான் கூறுவேன். சுனில் கவாஸ்கர் மாதிரி ஒருவர் இருக்கும் பொழுது ஏன் அவரிடம் ஆலோசனை கேட்க முடியாது? இதில் எதற்காக ஈகோ?

இந்த பிரச்சனைக்கு காரணம் அவர்கள் தாங்கள் எல்லா வகையிலும் சிறப்பாக இருப்பதாக தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை அவர்கள் சிறப்பாகவே இருக்கட்டும், 50 சீசன்களை பார்த்துள்ள கவாஸ்கர் போன்ற ஒருவரின் ஆலோசனைகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. புல் எங்கே வளர்கிறது சூரியன் எந்த பக்கம் வருகிறது என்று அவருக்கு மிக நன்றாக தெரியும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான பயிற்சியில் இருந்த ரவீந்திர ஜடேஜாவிடம் இது குறித்து கேட்ட பொழுதும் ”கபில்தேவ் இப்படி எப்பொழுது சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சமூக ஊடகங்களில் இம்மாதிரியான விஷயங்களை தேடுவது இல்லை. இங்கு எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. முன்னாள் வீரருக்கு அவருடைய கருத்தை பகிர்ந்து கொள்ள முழு உரிமை உண்டு. ஆனால் அவர் கூறியது போல் எங்கள் அணியோ அல்லது தனிப்பட்ட வீரர்களிடமோ எதுவும் கிடையாது. எங்களிடம் எந்த ஆணவமும் கிடையாது.

எங்கள் அணியில் எல்லோரும் அவரவர் கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள். எல்லோருமே கடின உழைப்பாளிகள். யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லோரும் 100% கொடுக்கவே உழைக்கிறார்கள். பொதுவாக இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வியடையும் பொழுது இது போன்ற கருத்துக்கள் வரத்தான் செய்யும். இது நல்ல வீரர்கள் கொண்ட நல்ல அணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அதுவே எங்களது முக்கிய நோக்கம். மற்றபடி எங்களுக்கென்று தனிப்பட்ட எதுவும் கிடையாது” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை