சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், வில் யங் மற்றும் டேரில் மிட்செலின் அரைசதங்கள் அடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்னில் நடையைக் கட்டினார். இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி, இந்தப் போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய சமயத்தில் இஷாந்த் சர்மா மற்றும் ஜாகீர் கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து சாதித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 145 இன்னிங்ஸ்களில் விளையாடி 314 விக்கெட்டுகளை கைப்பற்றி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் இஷாந்த் சர்மா 105 டெஸ்டில் 188 இன்னிங்ஸ்களில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் 92 டெஸ்டில் 165 இன்னிங்ஸ்களில் விளையாடி 311 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6ஆம் இடத்தில் தொடர்கின்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்திலும், சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 533 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 434 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்தையும், முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளை கைப்பற்றி 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர்.