ICC Test Rankings: அகல பாதாளத்திற்கு சென்ற பாகிஸ்தான் அணி; மீண்டும் எழுச்சி அடையுமா?
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது 262 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியானது 56 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வங்கதேச அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி ஐசிசி தரவரிசையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி ஐசிசி வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி மூன்றாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணி நான்காம் இடத்திலும், நியூசிலாந்து அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளன. இதற்கு முன் 6ஆம் இடத்தை பிடித்திருந்த பாகிஸ்தான் அணியாது தொடர் தோல்விகள் காரணமாக இரண்டு இடங்கள் பின் தங்கி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதன் காரணமாக இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு இடம் முன்னேறி 6 மற்றும் 7ஆம் இடங்களைப் பிடித்துள்ளனர். மேற்கொண்டு வங்கதேச அணி 9ஆம் இடத்தையும், அயர்லாந்து அணி 10 ஆம் இடத்தையும், ஜிம்பாப்வே அணி 11ஆம் இடத்தையும், இந்த பட்டியலின் கடைசி இடத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் தொடர்கின்றனர். மேலும் பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.