BAN vs IND: இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ்?
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய இளம் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இரண்டாவது டி20 போட்டி கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் காட்டடி அடித்து 51 பந்துகளில் 111 ரன்களை குவித்து அசத்தியதால், இந்தியா 191 ரன்களை குவித்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் 161 ரன்கள் இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்களில் 75/4 என ரன்களை சேர்த்து விளையாடி வந்தபோது மழை குறுக்கிட்டது. அடுத்து, ஆட்டம் நடைபெறவே இல்லை. டிஎல்எஸ் விதிமுறைப்படி இரண்டு அணிகளும் 9 ஓவர்களில் 75 ரன்கள் என்ற சமமான ஸ்கோரில் இருந்ததால் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இந்தியா 1-0 என்ற கணக்கில் இந்த டி20 தொடரைக் கைப்பற்றியது.
இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய சூர்யகுமார், “நான் முதலில் சிவப்பு நிற பந்தில்தான் விளையாடினேன். மும்பை அணிக்காக முதல்தர டெஸ்ட் போட்டிகளில் நான் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளதால், டெஸ்ட் குறித்து தேவையான அறிவு என்னிடம் இருக்கிறது. ஆகையால், விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்.
இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர ஆல் அல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் காயன் இன்னும் குணமடையாததால், அவர் இத்தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரவீந்திர ஜடேஜா பங்கேற்காத பட்சத்தில் அவருக்கு மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் 44.04 சராசரியுடன் 10 சதங்கள் உட்பட 5326 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.