புதிய பயணத்தை தொடங்க உற்சாகமாக இருக்கிறேன் - ரிக்கி பாண்டிங்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் இதுவரை இத்தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியானது இரண்டு அன்கேப்ட் வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, கடந்த சீசனின் பஞ்சாப் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஷாங்க் சிங்கை ரூ.5.5 கோடிக்கும், பிரப்ஷிம்ரன் சிங்கை ரூ.4 கோடிக்கும் என அந்த அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. இதன்மூலம் எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் ரூ.110.50 கோடியுடன், அதிக ஏல தொகை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் பங்கேற்கவுள்ளது. இதனால் எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் பஞ்சா கிங்ஸ் அணியின் செயல்முறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரா முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தக்கவைப்பு மற்றும் எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்து ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரு புதிய தொடக்கத்தில் எனது பயணத்தை தொடங்க நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
அதற்கேற்றவாறு அணியின் தக்கவைப்பு பட்டியலும் வெளியாகியுள்ளது. பஞ்சாப் கிங்ஸுடன் நான் என்ன செய்தேன் என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாங்கள் இரண்டு அன்கேப்ட் வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளோம். இதன் காரணமாக மிகப்பெரும் தொகையுடன் நாங்கள் இந்த ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளோம். எனவே, அணிக்கு தேவையான ஒட்டுமொத்த வீரர்களையும் ஒன்றாக இணைக்கும் திறன் எங்களிடம் உள்ளதாக நான் நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இந்த முறை பல அற்புதமான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். அதனால் நாங்கள் விரும்பினால், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் எங்களால் இந்த ஏலத்தில் எடுக்க முடியும், அதேபோல் சில வெளிநாட்டு வீரர்களையும் எங்களால் ரிடெய்ன் செய்ய முடியும். அதனால் நீங்கள் உங்களுடை முதல் தேர்வை தீர்மானிப்பதுடன், அவர்களுக்காக நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.