இந்த வெற்றி குறித்து பேச வார்த்தையே என்னிடம் இல்லை - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐசிசி ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 39ஆவது லீக் போட்டியானது இன்று மும்பை வான்கடை மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக தொடக்க வீரர் இப்ராஹிம் ஜாத்ரான் 129 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்த வேளையில் 91 ரன்களுக்கு எல்லாம் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்து விக்கெட் விழாமல் இறுதிவரை களத்தில் நின்று 46.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வெற்றி அழைத்து சென்றனர். மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “இந்த போட்டி நம்ப முடியாத வகையில் இருந்தது. இந்த வெற்றி குறித்து பேச வார்த்தையே என்னிடம் இல்லை. அந்த அளவிற்கு இது ஒரு அற்புதமான வெற்றி. இதுபோன்ற ஒரு நிகழ்வு எப்போதாவது தான் நடக்கும்.
நிச்சயம் ரசிகர்கள் இந்த போட்டியை பற்றி பேசுவார்கள். அந்த போட்டியில் நானும் களத்தில் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேக்ஸ்வெல் ஒரு கிரேட் பிளேயர் என்பதை இந்த போட்டியில் காண்பித்து விட்டார். பொறுமையாக இருந்த அவர் ஒரு திட்டத்துடனே பேட்டிங் செய்தார். குறிப்பாக வெற்றிக்கு 200 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையிலும் அவர் இந்த போட்டியை பாசிட்டிவாக அணுகினார். அவரது இந்த ஆட்டம் உண்மையிலேயே ஸ்பெஷலான ஒன்று.
அதேபோன்று தசைப் பிடிப்பால் அவர் பாதிக்கப்பட்டபோது அடுத்தடுத்து வீரர்கள் களத்திற்குள் வர தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் மேக்ஸ்வெல் விடாப்பிடியாக இந்த போட்டியை களத்தில் நின்று முடித்து கொடுக்க வேண்டும் என்று உள்ளே நின்று பேட்டிங் செய்தார். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளோம். உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.