என்னுடைய ரெக்கார்ட் அவ்வளவு மோசமாக இல்லை - ரிஷப் பந்த்!

Updated: Wed, Nov 30 2022 13:12 IST
Rishabh Pant defends himself after his criticism of his form in white-ball cricket! (Image Source: Google)

நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றினாலும் அடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது. 

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் அறிமுகமான 2017 முதல் டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் சுமாராக செயல்படாத ரிஷப் பந்த் ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதில்லை.

இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சொதப்பலாகவே செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவது போல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் அசத்துவார் என்பதற்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகம் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வருகிறது.

ஆனால் அவரோ 1 முதல் 7 வரை அனைத்து இடங்களிலும் பெற்ற வாய்ப்புகளின் அருமையை உணராமல் குருட்டுத்தனமான ஷாட் அடித்து தனது விக்கெட்டை எதிரணிக்கு பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் ஆதரவு கொடுத்த நிறைய முன்னாள் வீரர்களே தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவரை அதிரடியாக நீக்கிவிட்டு சஞ்சு சான்சனுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்க தொடங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உங்களது ஆட்டம் மோசமாக உள்ளது என்பதை வீரந்திர சேவாக்கிடம் தெரிவித்ததாக கூறிய பிரபல வர்ணையாளர் ஹர்ஷா போக்லே அந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று நேரடியாக மடக்கி பிடித்துக் கேட்டார். அதற்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தம்முடைய ரெக்கார்ட் மோசமாக இல்லை என்று தெரிவித்த ரிஷப் பந்த், தனக்கு 25 வயது மட்டுமே நிரம்பிய தம்மை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய ரிஷப் பந்த, “சார், ரெக்கார்டுகள் என்பது வெறும் நம்பர்கள் மட்டுமே. அதே சமயம் என்னுடைய வெள்ளை பந்து கிரிக்கெட் ரெக்கார்ட் அவ்வளவு மோசமாக இல்லை. இது போன்ற ஒப்பீடுகளை செய்வது என்னுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமல்ல. நான் தற்போது 24 – 25 வயது மட்டுமே நிரம்பியுள்ளேன். ஒருவேளை நீங்கள் இந்த வயதிலேயே என்னை ஒப்பிட விரும்பினால் அதை நான் 30 – 32 வயது கடந்த பின் செய்யுங்கள். டி20 கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாட நான் விரும்புகிறேன். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 4 – 5 ஆகிய இடங்களிலும் டெஸ்ட் போட்டிகளில் 5வது இடத்திலும் விளையாடுகிறேன். அப்படி லோயர் ஆர்டரில் விளையாடும் போது அதற்கேற்ற போல் எனது திட்டங்களும் மாறுகின்றன. இருப்பினும் அணி நிர்வாகம் என்னை எங்க பேட் செய்ய சொல்கிறார்களோ அங்கே நான் விளையாடுகிறேன். ஒருநாள் போட்டிகளில் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியமில்லை. டி20 போட்டிகளில் மட்டுமே முன்கூட்டியே திட்டமிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 43 என்ற அற்புதமான சராசரியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தோனியை மிஞ்சி சதங்களை அடித்து சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 35 என்ற சராசரியை கொண்டுள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் அதைவிட மோசமாக செயல்பட்டுள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை