ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ரிஷப் அபார வளர்ச்சி; டாப் 10 பட்டியளிலிருந்து வெளியேறிய விராட் கோலி!
இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. இதையடுத்து இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் டாப் 10இல் இந்திய வீரர்கள் சிலர் இடம்பிடித்துள்ளார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் பிரபல இந்திய பேட்டர் விராட் கோலி 11, 20 எனக் குறைவான ரன்களே எடுத்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 9ஆம் இடத்திலிருந்து 13ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளார் கோலி.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக டாப் 10 பட்டியலில் கோலி இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாமல் இருப்பதைத் தற்போது தரவரிசைப் பட்டியலும் உறுதி செய்துள்ளது.
நியூசிலாந்து தொடருக்கு முன்பு 47ஆவது இடத்தில் இருந்த ஜானி பேர்ஸ்டோவ், 10ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 5ஆவது டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதல் இடத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட்டும், 2ஆவது இடத்தில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் லபுஷாக்னேவும், 3ஆம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும், நான்காம் இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமும் உள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10 பட்டியலில் உள்ள இந்திய வீரர்கள்
- பேட்டிங் டாப் 10 பட்டியலில் ரிஷப் பந்த் 5ஆம் இடத்திலும் ரோஹித் சர்மா 9ஆவது இடத்திலும் உள்ளார்கள்.
- பந்துவீச்சு டாப் 10 பட்டியலில் அஸ்வின் 2ஆம் இடத்திலும், தற்காலிக கேப்டன் பும்ரா 3ஆம் இடத்திலும் உள்ளார்கள்.
- ஆல்ரவுண்டர் டாப் 10 பட்டியலில் ஜடேஜா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2ஆம் இடத்திலும் உள்ளார்கள்.