ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கிய என்சிஏ!

Updated: Sun, Mar 10 2024 22:25 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்தது. 

ஆனால் தனது காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பந்த் அதன்பின் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதற்கேற்றவாரே அவர் விளையாடிவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் ரிஷப் பந்த் இந்த சீசனில் விளையாடுவது உறுதிசெய்திருந்தார். ஆனாலும் அவரால் முழு நேர விக்கெட் கீப்பிங் பேட்டராக விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. 

இந்நிலையில், ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் தாம் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை ரிஷப் பந்த் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவதற்கு  தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இன்று அவருக்கு மேற்கொள்ள பட்ட சோதனையின் முடிவில், ரிஷப் பந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இருப்பினும் அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு பேட்டராக மட்டுமே விளையாட வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் சமீபத்தில் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை செய்து வந்தாலும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பேட்டராக மட்டும் பயன்படுத்துமாறு என்சிஏ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால், ரிஷப் பந்தை ஒரு பெட்டராக மட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை