ரிஷப் பந்த் இடம் பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு  - ரிக்கி பாண்டிங்!

Updated: Fri, Mar 24 2023 20:05 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்ட அவர் அடுத்த ஓர் ஆண்டுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் அறிவித்ததால் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 உலகக் கோப்பை தொடர் என அனைத்து தொடர்களிலும் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது முதற்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள ரிஷப் பந்த் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்திருக்கிறார். இன்னும் அவரது காயம் முற்றிலும் குணமடைந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பவே ஒரு ஆண்டு ஆகும் என்பதனால் நிச்சயம் 2023 ஆம் ஆண்டில் எந்த ஒரு போட்டியிலும் அவர் விளையாடப்போவதில்லை.

இதன் காரணமாக அவருக்கான மாற்று வீரரை இந்திய அணி தற்போது தயார் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த்க்கு பதிலாக யாரை கேப்டனாக நியமிப்பது என்ற தேடுதலின் முடிவில் டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி அணியில் ரிஷப் பந்த் இடம் பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவது மிகவும் பெரிய விசயம் என்றும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் எங்கள் அணியின் இதயம் மற்றும் ஆன்மா. ஐபிஎல் போட்டிகளின் போது அவர் எனது அருகில் எப்போதுமே அமர்ந்திருப்பார். ஆனால் இந்த ஆண்டு அது சாத்தியமில்லை இருந்தாலும் அவருடைய ஜெர்சி எண்ணை எங்களது சட்டையிலோ அல்லது தொப்பியிலோ வைத்திருக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். ஏனெனில் அவர் இல்லாவிட்டாலும் அவருடைய நம்பர் எங்களுடன் இருந்தால் எங்கள் லீடர் எங்களுடன் தான் இருக்கிறார் என்பதை அது எடுத்துரைக்கும் அதனால் இதை செய்யவிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி அணியின் புதிய கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டாலும் ரிஷப் பந்திற்கு பதிலாக யார் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் பயிற்சிக்கு பிறகு அதை உறுதி செய்வோம் என்றும் ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை