சிட்னி டெஸ்ட்: பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் ரிஷப் பந்த்?
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவ்ரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளை குவித்து இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் பெரிதளவில் சோபிக்க தவறியது. அந்தவகையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த் சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரிஷப் பந்த் இருவரும் விளையாடி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறினர். ஆனால் அச்சமயத்தில் ரிஷப் பந்த் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்ததன் காரணமாக, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அணியின் தோல்விக்கு வழிவகுத்தனர். இதனால் அணி நிர்வாகம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரில், ரிஷப் பந்த் 4 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 22 சராசரியுடன் 154 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால்தான் அவரது இடம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெல் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய அணிக்காக இதுவரை 4 டெஸ்டில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள துருவ் ஜூரெல் 40.40 என்ற சராசரியில் 202 ரன்களை எடுத்துள்ளார். மேற்கொண்டு நடப்பு பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு முன்பு, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்களில் விளையாடிய இந்தியா ஏ, இரண்டாவது போட்டியில் துருவ் ஜூரல் முதல் இன்னிங்ஸில் 80 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.