ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Updated: Sat, Jan 07 2023 13:50 IST
Rishabh Pant Operated For Ligament Tear On Right Knee In Mumbai: Report (Image Source: Google)

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இவர் இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டோராடூன் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைபெற்று வந்த ரிஷப் பந்த், சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கோகிலா பென் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவமனையின் மருத்துவக்குழு மற்றும் பிசிசிஐ-ன் மருத்துவக்குழு இணைந்து பந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரிஷப் பந்துக்கு எந்தவித எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றாலும் காலில் மூட்டுப்பகுதியிலும், கணுக்கால் பகுதியிலும் தசைநார்கள் கிழிந்துள்ளன. அதற்காக 2 அறுவை சிகிச்சைகளையும் செய்தே தீர வேண்டும். ஆனால் எதிர்பார்த்ததை விட தசைநார் கிழிவு பெரிதாக இருப்பதால், வெகு சீக்கிரம் குணமடைவார் என எதிர்பார்க்க வேண்டாம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுவாக தசைநார் கிழிவு ஏற்பட்டால் ஒருவர் அறுவை சிகிச்சைப்பெற்று குணமடைய 6 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இவருக்கு காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதாலும், 2 இடங்களில் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதால் குணமடைய 10 மாதங்களுக்கும் மேல் ஆகும் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் அறுவை சிகிச்சைகள் உடனடியாக செய்யப்படவில்லை. உடலில் உள்ள அனைத்து காயங்களும் நன்கு சரியானவுடன், விமானத்தில் பயணிக்கலாம் என்ற நிலைமை வந்தவுடன் அறுவை சிகிச்சைகள் நடைபெறவுள்ளன. ஒருவேளை பந்த் விருப்பப்பட்டால் மும்பையிலேயே இதனை செய்யலாம். ஆனால் லண்டனுக்கு செல்ல பிசிசிஐ-தான் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரையெல்லாம் தவறவிடுவார் எனக்கூறப்பட்டு வந்த சூழலில் இந்தாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களிலும் விளையாட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை