தீவிர பயிற்சியில் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் ரிஷப் பந்த். கடந்த டிசம்பர் 30ஆம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது.
கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர், தற்போது ஃபிட்னஸ் சார்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அவர் களம் திரும்ப எப்படியும் சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது.
இந்நிலையில் அவர் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக உடற்பயிற்சி கூடத்தில் அதி தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை ரிஷப் பந்த் வெளியிட்டுள்ளார். அவ்வப்போது தனது உடல்நலன் சார்ந்த பதிவுகளை சமூக வலைதளத்தில் பந்த் பகிர்வார். அந்த வகையில் இந்த காணொளியையும் அவர் பதிவிட்டுள்ளார்.