உச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் இங்கிலாந்து சென்றடைந்து, தனிமைப்படுத்த பட்டது.
இந்நிலையில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அதன்படி விராட் கோலி தலைமையில் ஒரு அணியும், அஜிங்கியா ரஹானே தலைமையில் ஒரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது.
இதில் இன்றைய நாளில் நடைபெற்ற போட்டியில் ரிஷப் பந்த 94 பந்துகளில் 121 ரன்களை குவித்து அசத்தினார். அதிலும் அவர் பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், அஸ்வின் ஆகியோரது ஓவர்களை எதிர்கொண்டு சதத்தை நிறைவு செய்துள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லும் 135 பந்துகளில் 85 ரன்களை குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது தெரியவந்துள்ளது. இதே உத்வேகத்துடன் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்திலும் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.