ஆஸி தொடர், ஐபிஎல் தொடர்களை தவறவிடும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் சோகம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நேற்று கோர விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உயிர் பிழைத்ததே அதிசயம் என்ற அளவிற்கு அவருடைய கார் சுக்கு நூறாக உடைந்து, தீப்பற்றி எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் தான் பந்தை காப்பாற்றி இருக்கிறார்கள். நெற்றியில் இரண்டு இடத்தில் வெட்டுக்காயம், காலில் தசை நார் சிதைவு என பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பந்திற்கு உள் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவருடைய உடல் உறுப்புகள் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் பந்திற்கு மேலும் சில எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு பந்திற்கு எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ரிஷப் பந்திற்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிஷப் பந்தின் காயம் குணமடைய குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காயம் அடைந்த பிறகு அவர் மீண்டும் தனது உடல் தகுதியை எட்டி கிரிக்கெட்டுக்கு திரும்ப ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என கூறப்படுகிறது.
இதனால் முக்கியத்துவம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்க மாட்டார். இதேபோன்று ஐபிஎல் தொடர், ஆசிய கோப்பை போன்ற தொடரிலும் விளையாட மாட்டார். இதனால் ரிஷப் பந்த் பணிக்கு திரும்புவது சிக்கலாக உள்ளது. எனினும் ரிஷப் பந்த் உயிர் பிழைத்தது பெரிய விஷயம் என்பதால் ரசிகர்கள் அதனை நினைத்து நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.
ரிஷப் பந்த் இல்லை என்றால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல், இஷான் கிஷன் ,சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் ரிஷப் பந்திற்கு பேட்டிங் , தனிப்பட்ட வாழ்க்கை என பல்வேறு பிரச்சனைகள் சந்தித்த நிலையில் தற்போது விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.