இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 45 ரன்களில் குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 79 ரன்கள் எடுத்த நிலையில் பதும் நிஷங்காவும், 20 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேராவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர்.
இதனால் இலங்கை அணியானது 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய ரியான் பராக் 1.2 ஓவர்கள் பந்துவீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து தனது பந்துவீச்சு குறித்து பேசிய ரியான் பராக், “நான் பந்து வீசுவதை மிகவும் விரும்புகிறேன். வலைப்பயிற்சிகளில் நான் நிறைய பந்து வீசுவேன். வலைப்பயிற்சியில் எப்படி பந்து வீச வேண்டும் எங்கே பந்து வீச வேண்டும் என்பது பற்றி பயிற்சியாளர்களுடன் நிறைய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன்.
மேலும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் எப்படி பந்துவீச வேண்டும் என்பது பற்றி அணியின் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அதனால் பிட்ச்சில் பந்து நன்றாக சுழலும்போது 16, 17ஆவது ஓவரில் வாய்ப்பு கிடைத்தால் நான் பந்து வீசுவேன். மற்ற பவுலர்கள் என்னுடைய வேலையை எளிதாக்கினர். அவர்கள் ஏற்படுத்திய அழுத்தத்தால் நான் ஸ்டம்ப் லைனில் மட்டுமே வந்து வீச வேண்டியிருந்தது. அதே சமயம் பந்தும் நன்றாக சுழன்றது” என்று தெரிவித்துள்ளார்.